வாஷிங்டன்: ரிசிஸ்டன்ஸ் ஃபிரன்ட் என்றழைக்கப்படும் கிளர்ச்சி முன்னணியை (டிஆர்எஃப்) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா இவ்வாறு வகைப்படுத்தியுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ வியாழக்கிழமை (ஜூலை 17) அறிக்கையில் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சி முன்னணி, பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவிலிருந்து பிரிந்துவந்த அமைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் கிளர்ச்சி (Kashmir Resistance) என்றும் அழைக்கப்படும் டிஆர்எஃப், பஹல்காம் தாக்குதலுக்கு முதலில் பொறுப்பேற்றுக்கொண்டது. சில நாள்களுக்குப் பிறகு அக்குழு அதை மறுத்தது.
அமெரிக்கா, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தியுள்ளது. அந்த அமைப்பு, இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக நம்பப்படுகிறது.
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை நகரில் மூன்று நாள்கள் நீடித்த தாக்குதலும் அவற்றில் அடங்கும்.
டிஆர்எஃப்பை வாஷிங்டன் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும் குறிப்பிடத்தக்க உலகளாவிய பயங்கரவாத அமைப்பு என்றும் வகைப்படுத்தியது, பஹல்காம் தாக்குதலுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குரல் எழுப்புவதை வலியுறுத்தும் நடவடிக்கை என்று திரு ருபியோ குறிப்பிட்டார். டிஆர்எஃப், லஷ்கர்-இ-தொய்பா அதன் நடவடிக்கைகளை மறைமுகமாக மேற்கொள்ள வகைசெய்யும் அமைப்பு என்று திரு ருபியோ கருத்துரைத்தார்.
டிஆர்எஃப், லஷ்கர்-இ-தொய்பாவிலிருந்து பிரிந்து உருவான அமைப்பு என்று ‘சவுத் ஏஷியா டெரரிசம் போர்ட்டல்’ (South Asia Terrorism Portal) எனும் இந்தியத் தலைநகர் டெல்லியில் இயங்கும் ஆய்வு நிலையத்தின் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஆர்எஃப், 2019ஆம் ஆண்டு தலைதூக்கியது.
தொடர்புடைய செய்திகள்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அண்டை நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய அளவில் சண்டை மூண்டது. இருதரப்பு உறவு மேலும் மோசமடைந்தது.