தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஷ்யா- உக்ரேன் போரை நிறுத்தவே இந்தியாவுக்குக் கூடுதல் வரி : அமெரிக்கா

1 mins read
c2cdb469-ab0b-48e4-abb0-542cfd822ab8
வெள்ளை மாளிகை பேச்சாளர் கரோலின் லீவிட். - படம்: இபிஏ

வாஷிங்டன்: ரஷ்யா - உக்ரேன் போரை நிறுத்தவே இந்தியாமீது கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்ததாக வெள்ளை மாளிகை பேச்சாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கத்திற்கு அமெரிக்க மக்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் அதனால், இந்தியாமீது கூடுதல் வரி விதிப்பு உட்பட பிற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறிய அவர், அவ்வாறு செய்யாவிட்டால் அது அணு ஆயுதப் போருக்கு வழிவகுத்திருக்கும் என்றார்.

மேலும், வர்த்தகப் பிரச்சினையை முதன்மைப்படுத்துவதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் மோதலை டிரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் அவர் சொன்னார்.

முன்னதாக, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா குறை கூறியது.

மேலும், உக்ரேன்மீது ரஷ்யா நடத்திவரும் போருக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன்மூலம் இந்தியா நிதியளிப்பதாகக் குற்றம்சாட்டியது.

அதோடு இந்தியப் பொருள்கள்மீது 25% வரி விதித்துள்ள அமெரிக்க அரசு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் கூடுதலாக 25% வரியை உயர்த்தி மொத்தமாக 50 விழுக்காடு வரி உயர்வை அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே, அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்குவது தொடரும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்