அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
உளவுத்துறை இயக்குநராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக இந்தோ, பசிஃபிக் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் அவர், அப்பயணத்தின் ஓர் அங்கமாக இந்தியாவுக்கும் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக துளசியின் இந்தப் பயணம் அமைகிறது.
இதுகுறித்து சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்தோ-பசிஃபிக் நாடுகளுக்குத் தாம் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், பசிஃபிக் பகுதி குறித்து தமக்கு நன்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஏனெனில் நான் குழந்தையாக இருக்கும்போது அங்கு வசித்திருக்கிறேன். இந்தப் பயணத்தின்போது ஜப்பான், தாய்லாந்து, இந்தியாவுக்கும் செல்கிறேன்.
“அதிபர் டிரம்பின் அமைதி, சுதந்திரம், செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம். பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளேன்,” என்று துளசி தெரிவித்துள்ளார்.
தாம் விமானத்தில் ஏறும் புகைப்படம் ஒன்றையும் அவர் தமது பதவில் பகிர்ந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வாஷிங்டனில் சந்தித்துப் பேசியுள்ளார் துளசி கப்பார்ட். அப்போது இருதரப்பு உறவுகள், வியூக நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்திருந்தனர்.
இந்தப் பயணமானது இந்தோ, பசிஃபிக் பகுதியுடனான அமெரிக்காவின் உறவுகள், புரிந்துணர்வை வலுப்படுத்தவும் வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தைப் பராமரிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதி என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள முதல் பெண்மணியான துளசி கப்பார்ட், இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
எனவே, இந்தோ-பசிஃபிக் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய பங்காளியான இந்தியாவுடனான அவரது விவாதங்களில் பல்வேறு முக்கியமான அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துளசி கப்பார்டின் இந்தியப் பயணத்தில் நடத்தப்படும் இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது உளவுப் பரிமாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வட்டாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிகிறது.
இரு நாடுகளும் தங்கள் கூட்டாண்மையை சீராக வலுப்படுத்தியுள்ளன. குறிப்பாக, இந்தோ-பசிஃபிக் பகுதியில் இரு நாடுகளும் நிலைத்தன்மை, பாதுகாப்பு குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனது நட்பு நாடுகளுக்கான வாஷிங்டனின் கடப்பாட்டை, உறுதிப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்பதே துளசி கப்பார்ட்டின் நோக்கம் எனவும் கூறப்படுகிறது.
எனவே, இந்தியாவுடனான கலந்துரையாடல்கள் மூலம் அடையக்கூடிய முடிவுகள் இரு தரப்புக்குமான எதிர்கால ஒத்துழைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என ‘தி எகனாமிக் டைம்ஸ்’ உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

