புதுடெல்லி: ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் நாடுகளுக்கு 100% வரை வரியை விதிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு ஒரு புதிய மசோதா அதிகாரம் அளிக்கிறது.
இந்த மசோதாவால், புதுடெல்லி, வாஷிங்டன் இடையிலான உறவுகள் பாதிக்கப்படலாம் என்றும் உலகளாவிய எரிசக்திச் சந்தைகளிலும் இது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.
அந்த விரிவான தடை மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 16) இறுதி ஒப்புதல் அளித்தது.
அது அதிபர் டிரம்ப்பின் கையொப்பத்திற்குத் தற்போது அனுப்பப்பட்டுள்ளது.
இன்னும் சில நாள்களில் அவர் அதில் கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வியாழக்கிழமை (செப்டம்பர் 17) புதுடெல்லி ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டது.
“அண்மைய மாதங்களில் வரி குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதித்தோம், வரி விதிப்பால் இருதரப்பு உறவு மட்டுமன்றி அனைத்துலக எரிசக்திச் சந்தையிலும் ஏற்படக்கூடிய தாக்கங்களை இந்தியத் தரப்பு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது,” என்று இந்திய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
கடந்த ஓர் ஆண்டாக வரி விதிப்புப் பதற்றம் காரணமாக அமெரிக்க-இந்திய உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் உறவைச் சீரமைக்க முயன்றாலும் சரியான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியவில்லை.
அமெரிக்காவின் புதிய எண்ணெய் வரி நடவடிக்கை, ரஷ்யாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை வாங்கும் நாடுகளை இலக்காகக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா, சீனா, துருக்கிக்குப் புதிய வரி அபாயம் ஏற்பட்டுள்ளது.
கப்பல் வழி கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து இந்தியா தற்போது அதிகம் வாங்குகிறது.
மத்திய கிழக்கு மோதல்களாலும் ரஷ்யக் கொள்முதல் மீதான அமெரிக்கக் கட்டுப்பாடுகளாலும், இந்திய அரசு சுத்திகரிப்பு நிறுவனங்கள் விநியோகத்தில் பெரும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றன என்று புளூம்பெர்க் செய்தி அறிக்கை கூறுகிறது.
“தங்கள் வர்த்தக, பொருளியல் நலன்களைப் பாதுகாக்க இந்தியத் தரப்பு உறுதியாக உள்ளது,” என்று புதுடெல்லி அறிக்கையில் மேலும் குறிப்பிட்டது.
