அமிர்தசரஸ்: சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்திய குடிமக்களுடன் அந்நாட்டின் ராணுவ விமானம் ஒன்று புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கியது.
இந்த விமானத்தில் 104 சட்டவிரோத இந்திய குடியேறிகள் ஏற்றி வரப்பட்டதாக இ்ந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
அமெரிக்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். அவர்களைக் கண்டறிந்து நாடு கடத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சட்டவிரோத குடியேறிகளின் பட்டியலில் இந்தியர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளனர். ஏறக்குறைய 7.25 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியர்களும் வேறு சில நாட்டினரும் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
‘சி17’ என்று குறிப்பிடப்படும் அந்த ராணுவ விமானத்தில் 104 இந்தியர்கள் இருந்ததாகவும் அவர்களில் 25 பேர் பெண்கள், 12 பேர் சிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
அமிர்தசரஸ் நகரில் புதன்கிழமை தரை இறங்கிய நாடு கடத்தப்பட்டவர்களில் ஹரியானா, குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தனர்.
நாடு கடத்தப்பட்ட ஒவ்வொரு இந்தியரின் தனி விவரங்களையும் துல்லியமாகச் சரிபார்த்த பிறகே அவர்களை அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அனுப்பியதாக இந்தியா டுடே ஊடகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க விமானம் புதுடெல்லியில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் மாநிலத்திற்கு திருப்பி விடப்பட்டதாகவும் உயர்மட்ட அளவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு கடத்தப்பட்டவர்களை சுமந்து வந்த அமெரிக்க ராணுவ விமானமானது அந்நாட்டு ராணுவத் துருப்புகளை இடமாற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த விமானத்தில் ஒரு கழிவறை மட்டுமே இருக்கும் என்றும் மற்றொரு ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்பாக தம்மிடம் ஏராளமானோர் விசாரித்ததாகவும் எனினும் தற்போது அது குறித்த தகவல்களைப் பகிர முடியாது என்றும் தெரிவித்தார்.
அதே சமயம் அமெரிக்காவில் குடியுரிமைச் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதையும் அதன் எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளதையும் தம்மால் உறுதி செய்ய முடியும் என்றார் அந்த செய்தி தொடர்பாளர்.