வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு விற்கத் தயார்- அமெரிக்கா

2 mins read
57b18b91-948c-489e-b94c-e3cbff54c06f
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்:ஏபி

அதிரடி கைது நடவடிக்கையால் வெனிசுவேலாவில் அதிபர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, அந்நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும் என்று அறைகூவல் விடுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தற்போது வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அனுமதிக்க தயாராக உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால், அமெரிக்க அதிபர் இந்தியா மீது அதிகப்படியான வரிகளை விதித்தால் வறட்சியாகக் காணப்பட்டிருந்த இந்திய அமெரிக்க நல்லுறவுகள் மீண்டும் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பரந்த, வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளைக் கருத்தில் கொண்டு, வெனிசுவேலா எண்ணெய்யை வாங்க இந்தியாவை அனுமதிக்க வாஷிங்டன் தயாராக உள்ளதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் முக்கிய மூத்த அதிகாரி, அக்கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது, இதன்தொடர்பில் கட்டுப்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் கூடிய அமைப்பு உருவாக்கம் கண்டுவருகிறது என்றும், அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் அடிப்படையில், வெனிசுவேலா எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்காவுடன் தொடர்ந்திட, இந்தியாவை அமெரிக்கா அனுமதிக்கும் என்றும் அதிகாரி கூறினார்.

இதன்தொடர்பில் விளக்கமளித்த அமெரிக்க எரிசக்தித் துறையின் செயலாளர் கிறிஸ்டோஃபர் ரைட், ‘ஏறத்தாழ அனைத்து நாடுகளுக்கும் வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஆயத்தமாக உள்ளது,’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, வெனிசுவேலாவின் எண்ணெய்யை வாங்குவதற்கு அமெரிக்காவின் அனுமதியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தகவலை ரிலையன்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என்றபோதும், எண்ணெய் வர்த்தகத்தில் தடையின்றி ஈடுபடும் இலக்குடன், அதற்கான உரிய அனுமதியைப் பெற ரிலையன்ஸ் பிரதிநிதிகள் அமெரிக்க வெளியுறவு துறை பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பத் தகுந்த வட்டாரங்கள் வாயிலாக இத்தகவல் வெளியாகியுள்ளதால், இதற்கான ஒப்பந்தம்குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்குமாறு இந்தியாவின் மீது அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தனியார் நிறுவனமான ‘ரிலையன்ஸ்‘ தன் எண்ணெய் வர்த்தகத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் பாதுகாத்திடவும் அமெரிக்காவிடமிருந்து எண்ணெய்யைக் கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்