ரஷ்ய எண்ணெய் இறக்குமதி: இந்தியாவுக்கு மேலும் 30 நாள் அனுமதி

அமெரிக்காவின் புதிய எண்ணெய் இறக்குமதி விதிகள்

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி: இந்தியாவுக்கு மேலும் 30 நாள் அனுமதி

2 mins read
5cfe4af1-0873-44e4-aca1-e9b3d3f83ff6
ரஷ்யக் கொடியுடன் ‘அனடோலி கொலோட்கின்’ (Anatoly Kolodkin) எனும் எண்ணெய்க் கப்பல் மார்ச் 31ஆம் தேதி கியூபாவின் மாட்டான்சாஸ் விரிகுடாவில் (Matanzas Bay) சென்றது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா மேலும் 30 நாள்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்டார்.

புதிய விலக்கின்படி, மே 16 வரை அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகாமல் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்ய எண்ணெய்யை வாங்கலாம். ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் கப்பல்களில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருள்களுக்கும் இந்த அனுமதி செல்லுபடியாகும்.

ஈரான் போரினால் உலகளாவிய எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு ஆசியாவிலுள்ள நட்பு நாடுகள் அமெரிக்காவுக்குக் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அதன் காரணமாக, முன்னதாக ரஷ்ய எண்ணெய் மீதான விலக்கைத் நீட்டிக்கப்போவதில்லை என்று கூறிய அமெரிக்கா, தற்போது ஒரு மாதத்திற்கு விலக்கு அளித்துள்ளது.

அனைத்துலக எரிசக்தி முகவையின் தகவல்படி, ஈரான் போரினால் 80க்கும் மேற்பட்ட எண்ணெய், எரிவாயு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போதுமான எண்ணெய் விநியோகத்தை உறுதிசெய்ய அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

புதிய உத்தரவு ஈரான், கியூபா, வடகொரியா தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அளிக்கவில்லை.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பேரளவு ரஷ்யா, சவூதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பேரளவு ரஷ்யா, சவூதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது. - படம்: சின்பிசி

இந்தியா தற்போது ஏறக்குறைய 30 மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெய்க்கு தருவிப்பு ஆணை கொடுத்துள்ளது.

அதிபர் டிரம்ப்புக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான அண்மைய தொலைபேசி உரையாடலில் எண்ணெய் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

எனினும், இந்த முடிவு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய விலக்குகள் உக்ரேன் போரைத் தொடரும் ரஷ்யாவிற்கு வருவாயைப் பெருக்க உதவும் என அவர்கள் வாதிடுகின்றனர். ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வருவாயைத் தடுக்கும் வகையில் இந்த விலக்கை ரத்துசெய்யக் கோரி இரு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்துள்ளனர்.

ஒன்றரை மாதமாக நீடிக்கும் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர, பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. இஸ்ரேல் - லெபனான் போர் 10 நாள்களுக்கு நிறுத்தப்பட்ட நிலையில், ஹோர்மூஸ் நீரிணை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்