இந்தியாவுடனான எண்ணெய் வணிகத்தை அமெரிக்கா தடுக்கக்கூடாது: ரஷ்ய அமைச்சர்

2 mins read
119ccfd0-943e-445c-8bda-88d2d7f9b2e8
அமெரிக்காவின் தடைகள் சட்டவிரோதமானவை என்கிறார் ரஷ்யாவின் எரிசக்தி துணை அமைச்சர் பாவெல் சோரோகின். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அமெரிக்கா விதித்துள்ள தடைகள் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான எண்ணெய் வணிகத்தைப் பாதிக்கக்கூடாது என்று ரஷ்யாவின் எரிசக்தி துணை அமைச்சர் பாவெல் சோரோகின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அண்மைய தடைகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இப்போதே மதிப்பிட முடியாது என்று செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 11) அவர் சொன்னார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது தடைகளை விதித்தன. அத்துடன், அந்நாட்டிடமிருந்து எரிசக்தி சார்ந்த கொள்முதல்களையும் நிறுத்திக்கொண்டன.

இதனையடுத்து, ரஷ்யாவிடமிருந்து கடல் வழியாக எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்திற்கு உயர்ந்தது. தள்ளுபடி விலையில் ரஷ்யா, இந்தியாவிற்கு எண்ணெய்யை விற்று வருகிறது.

இருப்பினும், முந்திய ஆறு மாதங்களைக் காட்டிலும் 2024 டிசம்பர், 2025 ஜனவரியில் இந்தியாவிற்கான ரஷ்ய எண்ணெய் இறக்குமதி சரிவுகண்டது.

இந்நிலையில், ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்தைக் குறிவைத்து அமெரிக்கா சென்ற மாதம் புதிய தடைகளை விதித்தது. இதனால், எண்ணெய்க் கொள்கலன் கப்பல்களுக்கான சரக்குக் கட்டணங்கள் உயர, சீனாவிலும் இந்தியாவிலும் உள்ள சில துறைமுகங்கள் அவற்றைத் தவிர்த்தன.

இவ்வேளையில், இந்திய எரிசக்தி வார மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திரு சோரோகின், “இந்தியாவிற்கும் எங்களுக்கும் இடையிலான உறவு பொருளியல் நடைமுறை அடிப்படையிலானது. அதனால், எந்த அரசியலும் எங்களது எரிசக்தி வணிகத்தைத் தடுக்க முடியாது என நம்புகிறேன்,” என்றார்.

மேலும், அமெரிக்காவின் தடைகள் சட்டவிரோதமானவை என்றும் அது உலகப் பொருளியலில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆயினும், தனது வளங்களை மேம்படுத்தவும் எரிசக்தித் துறையில் உலக அளவில் முன்னணி நாடாகத் தொடரவும் தேவையான தொழில்நுட்பம் ரஷ்யாவிடம் உள்ளது என்றும் அவர் சொன்னார்.

முன்னதாக, முந்திய ஆறு மாதங்களைக் காட்டிலும் 2024 டிசம்பர், 2025 ஜனவரியில் இந்தியாவிற்கான ரஷ்ய எண்ணெய் இறக்குமதி சரிவுகண்டது.

குறிப்புச் சொற்கள்