வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இந்தியர்கள் தனி விமானம் மூலம் இந்தியாவிற்குத் திருப்பியனுப்பப்பட்டனர்.
இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அந்நடவடிக்கை இடம்பெற்றதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 25) தெரிவித்தது.
இம்மாதம் 22ஆம் தேதி அந்த வாடகை விமானம் அனுப்பப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
கள்ளத்தனமாகக் குடியேறுவதையும் ஆட்கடத்தலையும் தடுப்பதற்கு இந்தியா உள்ளிட்ட அனைத்துலகப் பங்காளிகளின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா எடுத்துவரும் நடவடிக்கைகளை இது வெளிப்படுத்துவதாகக் கூறப்பட்டது.
“உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்திய நாட்டினர் விரைந்து வெளியேற்றப்படுவர். அமெரிக்காவில் குடியேறலாம் எனத் திட்டமிட்டுள்ளவர்கள், கடத்தல்காரர்களின் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்,” என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த கிறிஸ்டி ஏ. கேன்கலோ என்ற உயரதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து 495க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் 160,000க்கும் மேற்பட்ட, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த கள்ளக் குடியேறிகள் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.
கொலம்பியா, எக்வடோர், பெரு, எகிப்து, மௌரிட்டானியா, செனகல், உஸ்பெகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாட்டினரும் அவர்களில் அடங்குவர்.