புதுடெல்லி: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாத இறுதியில் அவர் இந்தியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடன் அவரது மனைவி உஷா வான்சும் செல்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஃபிரான்ஸ், ஜெர்மனிக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.
அதன் பிறகு இரண்டாவது அரசுமுறை பயணமாக திரு வான்ஸ் இந்தியாவிற்கு செல்லவிருக்கிறார்.
முதலாவது வெளிநாட்டு பயணத்தில் மியூனிக்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஜேடி.வான்ஸ் சட்டவிரோத குடியேறிகள், மத சுதந்திரம் பற்றி பேசினார். அதோடு ஐரோப்பிய அரசாங்கத்தை அவர் கடுமையாக விமர்சித்தார்.
பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், பாரிஸ் நகரில் ஜே.டி.வான்ஸும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினர்.
இதன் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், அவரது இந்திய வம்சாவளி மனைவியான உஷா வான்ஸ் ஆகியோர் காப்பியை பகிர்ந்து கொண்டனர். திரு வான்ஸ் குழந்தைகளுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கினார். அவர்களது மகன் விவேக்கிற்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றப் பின் பிரதமா் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அமெரிக்கா சென்றார்.
வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் பிரதமா் மோடியும் இருதரப்பு வரத்தக உறவை மேம்படுத்துவது குறித்து பேசினர். உயா்கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் இந்திய வருகை முக்கியம் பெறுகிறது. இரு நாடுகளுக்கு இடையே வரிவிதிப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என சொல்லப்படுகிறது.
முன்னதாக அமெரிக்க உளவுத் துறை இயக்குநர் துளசி கப்பார்ட்டும் இந்தியா வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

