வாஷிங்டன்: ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு மாத கால விலக்கு நீட்டிக்கப்படாது என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட அனைத்துலக எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க கடந்த மாதம் அந்தத் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டது.
எரிசக்தித் தேவைகளுக்கு இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் இந்தியாவிற்கு, இந்தத் தற்காலிகத் தளர்வுகள் விநியோக இடைவெளியைச் சமாளிக்கப் பெரிதும் உதவின.
அக்காலகட்டத்தில், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏறக்குறைய 60 மில்லியன் பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு தருவிப்பு ஆணை செய்திருந்தன.
மார்ச் மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் இறக்குமதி ஏறக்குறைய 6.2 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது முந்தைய மாதத்தைவிட நான்கு மடங்கு அதிகம்.
ரஷ்யாவுக்கான இந்த விலக்கு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஈரானுக்கான தளர்வு வரும் 19ஆம் தேதியுடன் முடிகிறது.
ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க விதிக்கப்பட்ட தடைக்கு மார்ச் 20ஆம் தேதி தளர்வு அறிவிக்கப்பட்டது. அதனால் 140 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் அனைத்துலகச் சந்தையைச் சென்றடைந்து தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டு ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதனால் அங்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து, ரஷ்யா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அளிக்கப்பட்ட விலக்கு நீட்டிக்கப்படாது என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) அறிவித்தார்.
“ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க வழங்கப்பட்ட விலக்கு நீட்டிக்கப்படாது. அதன் மூலம் ரஷ்யாவுக்குக் கிடைத்த பெரும் வருவாய், உக்ரேன் போருக்கே பயன்படுத்தப்படுகிறது. எனவே, அவர்களின் வருவாய் ஆதாரத்தைத் தடுப்பதே அமெரிக்காவின் நோக்கம்,” என்று கூறினார் ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர் ரிச்சர்ட் ப்ளூமெந்தால்.
அமெரிக்காவின் இந்த முடிவால் அனைத்துலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

