மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் ஏஐ தொழில்நுட்பப் பயன்பாடு

1 mins read
c8e99ead-f387-43fe-8ecc-c64bc252451f
நிதின் கட்காரி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏஐ’ மூலம் போக்குவரத்து மேலாண்மையை திறம்பட மேற்கொள்ள முடியும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல், விபத்துகளை குறைத்தல் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்காக மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளை பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு அது செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் போக்குவரத்துத் துறையில் ‘ஏஐ’ பயன்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளில் ‘ஏஐ’ விரிவாகப் பயன்படுத்தப்படும். ஏஐ அடிப்படையிலான காணொளி சம்பவ கண்டறிதல், அமலாக்க அமைப்புகள், தானியங்கி எண் தகடு, நவீன கேமராக்கள், மின்னணு கண்காணிப்பு, சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நிகழ் நேர கள பதிலுக்கான கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவையும் ஏஐ பயன்பாட்டில் அடங்கும்,” என தமது பதிலில் திரு கட்காரி குறிப்பிட்டார்.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் வடிவமைப்பு, கட்டுமானம், பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள போக்குவரத்து அமைச்சு, அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வழக்கமான பாதுகாப்பு, தணிக்கைக்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்