புதுடெல்லி: பணி நிமித்தமாகப் பிற மாநிலங்களுக்குச் செல்வோர், தங்கள் வாகனத்தை மறு பதிவு செய்யாமல் பயன்படுத்தும் காலத்தை மூவாண்டாக நீட்டிக்க இந்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
வேலையிட மாற்றம், ஒப்பந்தப் பணி ஆகியவை காரணமாகப் பலர் வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.
தற்போதுள்ள விதிமுறைப்படி ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை, வேறு மாநிலத்தில் ஓராண்டுக்கு மேல் பயன்படுத்தினால் அதன் உரிமையாளர் புதிய மாநிலத்தில் வாகனத்தை மறு பதிவு செய்ய வேண்டும்.
இது பணி நிமித்தம் காரணமாக வேறு மாநிலங்களுக்கு அடிக்கடி செல்வோர்க்கும் ஒப்பந்தப் பணியை முடித்து விட்டு மீண்டும் சொந்த மாநிலம் திரும்புவோர்க்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
அதை எளிதாக்குவதற்காக, வேறு மாநிலங்களில் மறுபதிவு செய்யாமல் வாகனங்களை மூவாண்டுகள் வரை பயன்படுத்தும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கடந்த வாரம் நடந்த இந்திய மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் அந்நாட்டின் சாலை போக்குவரத்து அமைச்சு விருப்பம் தெரிவித்தது.
வாகனங்களை மறு பதிவே செய்யாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பயன்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பதிவு முறைக்கும் இந்திய அரசின் தற்போதைய நடவடிக்கை மேலும் வலுசேர்க்கும் எனக் கூறப்படுகிறது.

