பயனர் பெயர் பகிரும் அம்சம்: ‘மெட்டா’வுக்கு இந்திய அரசு நோட்டீஸ்

பயனர் பெயர் பகிரும் அம்சம்: ‘மெட்டா’வுக்கு இந்திய அரசு நோட்டீஸ்

படம்: ராய்ட்டர்ஸ்

02 Jul 2026 - 6:56 pm

1 mins read

புதுடெல்லி: பயனர் பெயரை பகிர்ந்துகொள்வது தொடர்பான ‘வாட்ஸ்அப்’ வெளியிட்ட அறிவிப்பிற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ்அப் உரிமையாளரான ‘மெட்டா’ நிறுவனத்திற்கு இந்திய அரசு உத்திரவிட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர், புதிதாக ஒருவருடன் பேச விரும்பினால் தங்கள் கைப்பேசி எண்ணைக் கொடுக்க வேண்டியுள்ளது. இனி கைப்பேசி எண்களுக்குப் பதிலாக பயனர் பெயரை மட்டும் பகிர்ந்தால் போதும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

பயனர்களின் தனி உரிமையை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்டா நிறுவனம் கூறியிருந்தது.

மேலும், பயனர் பெயரை பயன்படுத்தி யாருக்காவது தகவல் அனுப்பினால் எதிர்முனையில் தகவலை பெறுபவர்களுக்கு அதை அனுப்பியவர்களின் கைப்பேசி எண் காட்டப்பட மாட்டாது.

இந்தப் புதிய தேவைக்காக பயனர் பெயர்களை முன்பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் இச்சேவை முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இக்குறிப்பிட்ட பயனர் பெயர் அம்சத்தை, அதன் தனி உரிமை-பாதுகாப்பு தாக்கங்கள் முடிவடையும் வரை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டாமென்று மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், புதிய அம்சத்தால் ஏதேனும் இணையவழி மோசடி, பிற முறைகேடுகள் நடக்காமல் தடுக்க மெட்டா நிறுவனம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்திற்கு இந்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் மூன்று நாள்களுக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
வாட்ஸ்அப்மெட்டாமத்திய அரசுகைப்பேசிதடை