மதுரா: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் கூறி, பங்ளாதேஷியர் 90 பேரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
காஜ்பூர் எனும் அவ்வூரில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் அடையாளங்களைச் சரிபார்த்தபோது அவர்கள் பிடிபட்டதாகக் காவல்துறை உயரதிகாரி ஷ்லோக் குமார் தெரிவித்தார்
“நௌஜீல் காவல் நிலைய அதிகாரிகள் காஜ்பூரில் உள்ள செங்கற்சூளைகளில் சோதனை செய்தபோது, அங்கிருந்தோரில் 90 பேர் பங்ளாதேஷ் குடிமக்கள் என்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் அனைவரும் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 35 பேர் ஆண்கள், 27 பேர் பெண்கள், 28 பேர் குழந்தைகள்,” என்று வெள்ளிக்கிழமை (மே 16) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் திரு குமார் கூறினார்.
மேலும், “அவர்கள் மூன்று, நான்கு மாதங்களுக்குமுன் மதுராவை வந்தடைந்தனர். அதற்குமுன் அவர்கள் அண்டை மாநிலத்தில் வசித்துவந்தனர். விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து உரிய மற்ற அமைப்புகளிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அந்த அமைப்புகளும் விசாரணையில் ஈடுபட்டுள்ளன,” என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருக்கும் பங்ளாதேஷியரையும் மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களையும் தீவிரமாகத் தேடிக் கண்டறிந்து நாடுகடத்துவதற்கான முயற்சியை அம்மாநில அரசு தொடங்கியது.
சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள்மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இப்போது பங்ளாதேஷியர், ரோஹிங்யாக்கள்மீது கவனம் திரும்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுபோல, இந்திய-நேப்பாள எல்லையில் அமைந்துள்ள அங்கீகாரம் பெறாத, சட்டவிரோதக் கட்டடங்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்த பாகிஸ்தான் குடிமக்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக முதல்வர் அலுவலகம் ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த சில நாள்களாக நாடு முழுதுமுள்ள வேறு பல மாநிலங்களிலும் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.