உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உட்பட 52 அரசியல் தலைவர்களுக்குக் குண்டுதுளைக்காத கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத் தலைவர்களுக்கு அந்த உடைகள் தரப்பட்டுள்ளன. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
மாநில அமைச்சர்கள் சஞ்சய் நிஷாத், நந்த கோபால் குப்தா, ஓம் பிரகாஷ் ராஜ்பார், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அபர்ணா யாதவ் முதலியோரும் அவர்களில் அடங்குவர்.
ஒரு கவச உடையின் விலை சுமார் 10 லட்சம் ரூபாய். முதல் கட்டத்தில் எட்டுத் தலைவர்களுக்கும் இரண்டாம் கட்டத்தில் 44 பேருக்கும் கவச உடைகள் வழங்கப்பட்டன.
ஸ்வதந்திர தேவ் சிங், ஜெய்பீர் சிங், மகேந்திர சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாநிலத்தின் 98 முக்கியப் பிரமுகர்களுக்குப் பல்வேறு பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
பாஜகவின் உத்தரப் பிரதேசத் தேர்தல் பொறுப்பாளராகப் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே நியமிக்கப்பட்டுள்ளார். மற்றப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம் அளித்துச் சமூகச் சமன்பாட்டை வலுப்படுத்த பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


