நொய்டா: உத்தரப் பிரதேசத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
நொய்டாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தனியார் நிறுவன ஊழியர்கள் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களில் ஒருதரப்பினர் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதோடு, கற்களை வீசி எறிந்ததாகவும் வாகனம் ஒன்றிற்குத் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வாகனங்கள் சேதமடைந்ததோடு, பாதிக்கப்பட்ட தொழிற்பேட்டைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பதற்றத்தைத் தணிக்கவும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் அங்குக் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து நொய்டா காவல்துறை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். அமைதியை நிலைநாட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று தெரிவிக்கப்பட்டது.
தனியார் ஊழியர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் நொய்டாவின் முக்கிய தொழில்பேட்டை பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

