பசுவைக் கொன்று, இனக் கலவரத்தைத் தூண்ட முயன்ற விஎச்பி தலைவர் கைது

2 mins read
2e0da05d-ebfc-4e71-aa6c-8fb871b93cc7
வாகனச் சோதனையில் உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறையினர். - படம்: இந்திய ஊடகம்

மொராதாபாத்: பசுவைக் கொன்று, இனக் கலவரத்தைத் தூண்டவும் உள்ளூர்க் காவல்துறை அதிகாரிக்கு அவப்பெயர் உண்டாக்கவும் முயன்றதாகக் கூறி, விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் மாவட்டத் தலைவர் உட்பட நால்வரை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறை கைதுசெய்தது.

மோனு விஷ்னோய் என்ற அவர், மேலும் மூவருடன் இணைந்து, ஒரு பசுவைத் திருடி, காட்டுப்பகுதியில் அதனைக் கொன்றதாகக் காவல்துறை தெரிவித்தது. இதனையடுத்து, அந்நால்வரையும் காவல்துறை புதன்கிழமை (ஜனவரி 31) கைதுசெய்து, சிறையில் அடைத்தது.

அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தவும் சாஜ்லத் காவல் நிலைய உயரதிகாரியைக் குறிவைத்தும் இச்சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாக ஹேம்ராஜ் மீனா எனும் காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.

சென்ற மாதம் 16ஆம் தேதி பசுவின் உடல் மீட்கப்பட்டதை அடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியதாக ‘டெக்கான் ஹெரால்டு’ செய்தி கூறியது.

“பசுவின் உடல் குறித்து விஷ்னோய் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். பசுவின் அருகே உள்ளூர்வாசி ஒருவரின் உடையையும் அவரது கைப்பேசி எண்ணையும் விஷ்னோய் போட்டுவிட்டுச் சென்றார்,” என்று திரு ஹேம்ராஜ் சொன்னார்.

அவற்றை வைத்து புலனாய்வு செய்தபோது, ஷகாபுதீன் என்பவர் சிக்கினார்.

“ஷகாபுதீனைக் கைது செய்து விசாரித்தபோது, ஜனவரி 16ஆம் தேதி பசுவின் சடலத்தைப் போட்டுவிட்டு வரவும் ஜனவரி 28ஆம் தேதி பசுவைத் திருடி, கொல்லவும் விஷ்னோய் பணம் தந்ததாக அவர் கூறினார்,” என்று திரு ஹேம்ராஜ் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில், ராமன் சௌத்ரி, ராஜீவ் சௌத்ரி என்ற விஷ்னோயின் இரு கூட்டாளிகளையும் காவல்துறை கைதுசெய்தது.

குறிப்புச் சொற்கள்