லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை திறக்கப்பட்டுள்ளது.
கோராக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) திறந்துவைத்தார். கானிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆலை, இந்தியாவின் இரண்டாவது பசுமை ஹைட்ரஜன் ஆலை என்று அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோரென்ட் குழுமத்தின் டோரன்ட் கேஸ், டோரன்ட் பவர் (Torrent Gas, Torrent Power) நிறுவனங்கள் இந்த ஆலையை அமைத்துள்ளன.
பசுமை எரிசக்திப் பயன்பாட்டுக்கு மாறிக்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகளில் இந்த பசுமை ஹைட்ரஜன் ஆலை ஒரு மைல்கல் என்று திரு ஆதித்யநாத் கூறினார். பசுமை ஹைட்ரஜன் வருங்காலத்துக்கான எரிசக்தியைச் சித்திரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு, பல்லுயிரியல், கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பது, மனித சுகாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஆலை முக்கியப் பங்காற்றும் என்றும் திரு ஆதித்யநாத் விவரித்தார்.
“மனித குலத்தையும் நவீன சமுதாயத்தையும் காப்பாற்றும் எண்ணம் இருந்தால் நாம் கரியமிலவாயு வெளியேற்றத்தை முடிந்தவரை குறைக்கவேண்டும். பசுமை எரிசக்தி, சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி காற்றுத் தூய்மைக்கேட்டால் ஏற்படக்கூடிய நோய்கள் ஏற்படுவதையும் குறைக்கிறது,” என்றார் அவர்.