லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 28.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில், 51 மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. இதில் ஹத்ராஸ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 185.1 மிமீ மழை பதிவாகியுள்ளது. மதுரா மாவட்டத்தில் தொடர் மழையால் 31 வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கனத்த மழை தொடர்பான சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மைன்புரியில் 5 பேரும், மதுராவில் 2 பேரும் உயிரிழந்தனர்.
அண்மையில் பெய்த மழையைக் கருத்தில் கொண்டு, அதிக மழை பெய்யும் மாவட்டங்களை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
தேவைக்கேற்ப மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

