திருவனந்தபுரம்: உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் மருந்துவம் படித்துவந்த இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான சவரியா என்ற மாணவி சக மாணவர் ஒருவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் பெரிந்தல்மன்னா பகுதியைச் சேர்ந்த சதாருல் அனாம் என்ற மாணவருடன் சவரியா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, சவரியாவின் மரணத்திற்குக் காரணமான சதாருல் அனாம் என்ற மாணவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவ நாளன்று சதாருல்லுக்கும் சவரியாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது, கடும் கோபமடைந்த சதாருல், தனது மடிக்கணினியால் சவரியாவின் தலையில் தாக்கியதாகத் தெரிகிறது.
அதில் பலத்த காயமடைந்த சவரியா, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது தலையில் ஏற்பட்ட கடுமையான ரத்தக்கசிவு காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சதாருல் உடனடியாகக் கைதுசெய்யப்பட்ட நிலையில், சவரியாவின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது உறவினர்களுடன் உஸ்பெகிஸ்தானுக்கு நேரில் சென்று, அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டதையடுத்து சவரியாவின் உடல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) புதுடெல்லி சென்றடைந்தது.
சவரியாவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான ஆலப்புழாவில் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

