வைஷ்ணவ தேவி கோவில் போலி வெள்ளிக் காணிக்கை சர்ச்சை: ஜம்மு காவல்துறை விசாரணை

வைஷ்ணவ தேவி கோவில் போலி வெள்ளிக் காணிக்கை சர்ச்சை: ஜம்மு காவல்துறை விசாரணை

கோப்புப் படம்: ஏஎன்ஏ

24 Sep 2026 - 3:30 pm

2 mins read

ஜம்மு: புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட ஏறக்குறைய ரூ.550 கோடி மதிப்பிலான வெள்ளி காணிக்கைகளில் போலி வெள்ளி கலந்திருப்பதாகவும் வெள்ளிக் காணிக்கைகளைக் கையாள்வதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு நீதிமன்றத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளர் தாக்கல் செய்த அறிக்கையில் முக்கியமான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

காணிக்கைகளைச் சேகரித்தல், பிரித்தெடுத்தல், சேமித்தல், பாதுகாப்பாகக் கொண்டு செல்லுதல், பதப்படுத்துதல் தொடர்பான அந்த 116 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் அதிகாரபூர்வ ஆவணங்கள், கண்காணிப்புக் கேமரா பதிவுகள், மின்னணுத் தரவுகளைக் காவல்துறை விரிவாக ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கோவில் வாரிய அதிகாரிகள், பூசாரிகள், பாதுகாப்புப் படையினரிடம் ஏற்கெனவே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. எனினும், வழக்கின் முழுமையான விசாரணைக்கு மேலும் சில மூத்த கோவில் வாரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அறிக்கையைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை எனக் காவல் தரப்பில் கோரப்பட்டது.

அந்த வழக்கின் மனுதாரரான வழக்கறிஞர் தீபக் சர்மா கூறுகையில், பக்தர்களால் அளிக்கப்பட்ட 20 டன் வெள்ளி காணிக்கைகளில் கலப்படம், முறைகேடு நடந்துள்ளதா என்பதை அறிய அறிவியல் பூர்வமான விரிவான விசாரணை அவசியம் என வலியுறுத்தினார்.

காவல்துறையின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்கி, வழக்கை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

ஐயப்பன் கோவில் கிரீடம்

இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.72 பவுன் தங்கக் கிரீடம் மாயமானதாக வெளியான தவகலை கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது.

தங்கக் கிரீடம் பாதுகாப்பாக உள்ளதாக கேரள அமைச்சர் முரளீதரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
கோவில்வெள்ளிபோலிகாவல்துறை