கோட்டா: இந்தியாவின் முதல் வந்தே பாரத் சரக்கு ரயிலின் வேகம் மீண்டும் சோதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மத்தியப் பிரதேச மாநிலம், கதிரூ - மஹ்பூ இடையே மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக இயக்கி அது சோதனை செய்யப்பட்டது.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள், நாடு முழுவதும் ரயில் பயணம் செய்வோரிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அதிவேகமாகச் செல்லக்கூடிய அந்த ரயில், பயணத்துக்கு மட்டும் முதலில் பயன்படுத்தப்பட்டது.
தற்போது, அடுத்தகட்டமாக, ‘வந்தே பாரத் பார்சல்’ என்ற பெயரில் அதிகவேக சரக்கு ரயிலும் சேவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சரக்குகளுக்கு ஏற்றவாறு புதிய ரயில்களைத் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், தயாரிப்புப் பணிகள் தற்போது நிறைவுபெற்றுள்ளன.
வந்தே பாரத் பயண ரயிலுக்கான அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சரக்கு ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தற்போது சேவையாற்றும் ரயில்களைக் காட்டிலும் மிகவும் வேகமாக சரக்குகளைக் கொண்டு செல்வதற்காக அவை தயாரிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட அந்த ரயில், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது.
உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் வசதி, பாதுகாப்பாக பொருள்களைக் கையாளும் வசதி போன்றவை அந்த ரயில்களில் நிறுவப்பட்டுள்ளன.
முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பின்னர், வந்தே பாரத் சரக்கு ரயில் கடந்த மார்ச் மாதம் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த ரயிலின் சோதனை ஓட்டம் கட்டங்கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் சில வாரங்களாக சோதனை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், புதன்கிழமை (ஜூலை 29) மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டா பிரிவில் அந்த ரயிலின் அடுத்தகட்ட சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு இடையில் கோட்டா - நாக்டா - சாவல் மகோபூர் வழியாக ஏறத்தாழ ஒரு மாத காலம் அந்த ரயில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் வந்தே பாரத் சரக்கு ரயில் அதிகபட்சமாக மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தை எட்டியுள்ளது.
ரயிலின் தொழில்நுட்பத் திறனைச் சோதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

