லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலை பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவருமான சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் தேசிய ஒற்றுமை தின பேரணி நடைபெற்றது.
அந்த நிகழ்வில் பங்கேற்ற மாநில முதல்வர் ஆதித்யநாத் சிறப்புரை நிகழ்த்தினார்.
“சர்தார் வல்லபாய் படேல், நமது விவாதங்களின் ஒரு பகுதியாக மாற வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடல் பாடுவது கட்டாயமாக்கப்படும். இதன்மூலம் உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாரத மாதா மற்றும் மாத்ருபூமி மீதான மரியாதை உணர்வு அதிகரிக்கும்.
“தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் காரணிகளை நாம் அடையாளம் காணவேண்டும். எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் எவரும் உருவாகாத வகையில் அவர்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும்,” என்று ஆதித்யநாத் பேசினார்.

