புதுடெல்லி: பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான லலித் மோடி தற்போது வனுவாத்து நாட்டில் தஞ்சம் புகுந்தார்.
இந்நிலையில் அவரது கடப்பிதழை ரத்து செய்யுமாறு இந்திய அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று அந்நாட்டின் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மோசடி வழக்குகளில் இருந்தும் நாடு கடத்தப்படுவதில் இருந்தும் தப்பிக்க, வனுவாத்து நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளார் லலித் மோடி. இந்நிலையில், அவரது கடப்பிழதை ரத்து செய்யுமாறு அந்நாட்டு குடியுரிமை ஆணையத்துக்கு பிரதமர் ஜோதம் நேபத் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், லலித் மோடிக்கு எதிராக சட்டப்பூர்வமான ஆதாரங்கள் போதிய அளவில் இல்லை. எனவேதான், அவருக்கு எதிராக எச்சரிக்கை நோட்டீஸ் பிறப்பிக்கக்கோரிய இந்திய அதிகாரிகளின் கோரிக்கையை இன்டர்போல் இருமுறை நிரகாரித்துள்ளது.
“இந்தத் தகவல் இப்போதுதான் எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற எச்சரிக்கை வெளிவந்தால், லலித் மோடியின் குடியுரிமை விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்பட்டுவிடும்,” என்று வனுவாத்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று லலித் மோடி கடப்பிதழை அந்நாடு ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

