பெங்களூரு: கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் காய்கறி ஏற்றிவந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர். புதன்கிழமை (ஜனவரி 22) அதிகாலை இவ்விபத்து நடந்தது. லாரியில் பயணம் செய்தவர்களில் 11 பேர் மாண்டதாகவும் 15க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும் இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த லாரியில் பயணம் மேற்கொண்ட அனைவரும் பழ வியாபாரிகள் என நம்பப்படுகிறது.
சவனூரில் இருந்து குமுடா சந்தைக்குக் காய்கறி விற்கச் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்த வாகனம் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் ஏற்றப்பட்ட காய்கறிகளின்மீது அமர்ந்து பயணம் செய்த வியாபாரிகளின்மீது லாரி விழுந்து நொறுங்கியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

