தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லியில் மாசு கட்டுப்பாடு விதிகளை மீறிய வாகனங்கள், கட்டுமானத் தளங்களுக்கு அபராதம்

2 mins read
3957ab19-a59f-405b-a0e4-2ce07fc8615c
திங்கட்கிழமை (நவம்பர் 4) டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு 373 என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது. அது ‘மிகவும் மோசமான நிலை’ என்பதைக் குறிக்கும். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய கட்டுமானத் தளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக காற்றுத் தரம் மோசமடைந்து வரும் நிலையில் அதிகாரிகள் அந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

டெல்லி ஆக மோசமான காற்று மாசு நகரம் என்று சுவிட்சர்லாந்தின் காற்றுத்தரக் குறியீட்டு நிறுவனம் (IQAir) குறிப்பிட்டுள்ளது.

எனவே காற்றின் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, கடந்த இரு வாரங்களாக கிட்டத்தட்ட 60,000 வாகனங்கள் 7,500 கட்டுமானத் தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்களில் 54,000 வாகனங்கள் ‘கட்டுப்பாட்டு அளவுக்குள் மாசு இருக்கிறது’ என்ற சான்றிதழைப் பெறத் தவறியவை. அவை தவிர, 3,900 வாகனங்கள் ஆகப் பழைமையானவை என்ற காரணத்துக்காகப் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக 597 கட்டுமானத் தளங்களுக்கு, சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகை என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அப்பட்டமாக விதிமீறலில் ஈடுபட்ட 56 கட்டுமானத்தளங்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

அக்டோபர் 15 முதல் 31 வரை திடீர் சோதனை நடத்தப்பட்டதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

இந்நிலையில், திங்கட்கிழமை (நவம்பர் 4) டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு 373 என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பிட்டுள்ளது. அது ‘மிகவும் மோசமான நிலை’ என்பதைக் குறிக்கும்.

அந்தக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் காற்றின் தரம் சுகாதாரமானது என்று பொருள்.

காற்றின் தரம் நவம்பர் 6ஆம் தேதி வரை மிகவும் மோசமான நிலையில் தொடரக்கூடும் என்றும் தொடர்ந்து ஆறு நாள்களுக்கு ‘மிகவும் மோசமான நிலை’ என்பதற்கும் ‘கடுமையான நிலை’ என்பதற்கும் இடையில் டெல்லி காற்றின் தரம் இருக்கக்கூடும் என்றும் புவியியல் அமைச்சு தெரிவித்து உள்ளது.

குளிர்காலங்களில் பஞ்சாப், ஹரியானாவில் மரக்கட்டைகள் எரிக்கப்படுவதால் வெளியேறும் புகை, தூசு போன்றவை டெல்லி தேசிய தலைநகர் வட்டாரத்தை (NCR) மிகவும் பாதிக்கின்றன.

அதன் காரணமாக, பள்ளிக்கூடங்களை அடிக்கடி மூடவேண்டிய கட்டாயமும் கட்டுமானத் தளங்களில் புதிது புதிதாக தடைகள் விதிக்கும் நிலையும் ஏற்படுகின்றன.

அந்த வட்டாரத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த மத்திய சுற்றுச்சுழல் துறையின்கீழ் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு உள்ளது.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் தணிக்கவும் தரப்படுத்தலுக்கான செயல் திட்டம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்