கோல்கத்தா: வக்ஃபு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பும் போராட்டமும் நீடித்து வருகின்றன.
வக்ஃபு திருத்த மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு அதிபர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள உமர்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வக்ஃபு சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டு, காவல்துறையினரை நோக்கிக் கற்கள் வீசப்பட்டதில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஒன்பது பேர் காயமடைந்தனர்.
கடும் முயற்சிக்குப் பின்னர் அந்த வன்முறை ஒடுக்கப்பட்டது.
இருப்பினும், முர்ஷிதாபாத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) மீண்டும் வன்முறை வெடித்தது. நிம்திதா ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலை நோக்கி கும்பல் ஒன்று கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது.
அதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் வரை காயமடைந்ததாகக் காவல்துறை வட்டாரம் கூறியது.
அதனைத் தொடர்ந்து, அங்கு சேவையாற்றக்கூடிய இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஐந்து ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
முர்ஷிதாபாத் மாவட்டம் முழுவதும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 12) காலை அந்த மாவட்டத்திற்குட்பட்ட ஜங்கிப்பூர் பகுதியில் காவல்துறை வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் கொளுத்தப்பட்டன.
வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 110 பேர் கைது செய்யப்பட்டனர். வன்முறை பரவாமல் தடுக்க அந்த வட்டாரத்தில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜியுடன் அவர் ஆலோசனை நடத்தியாகத் தெரிகிறது.
வக்ஃபு திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.