கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் கடத்தல் வழக்குகளில் பிடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட லாரிகளையும், ராட்சத கிரானைட் கற்களையும் அகற்றுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகாவில் 300க்கும் மேற்பட்ட கிரானைட் தொழிற்சாலைகள் உள்ளன.
பல்வேறு பகுதிகளில் இருந்து கற்கள் எடுத்து வரப்படுகின்றன. இதில் முறையாக அனுமதி பெறாமல் எடுத்து வரப்படும் கிரானைட் கற்கள், லாரிகள் கனிமவளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினால் பறிமுதல் செய்யப்படுகின்றன.
அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் லாரிகள் மற்றும் கிரானைட் கற்கள், பர்கூரில் திருப்பத்தூர் கூட்டு ரோட்டில் உள்ள தாலுகா அலுவலகம் அருகில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்ட லாரிகள், 50க்கும் மேற்பட்ட பெரிய கிரானைட் கற்கள் அந்த இடத்திலேயே இருக்கின்றன.
இதனால் அந்த பகுதி முழுவதும் புதர்மண்டி காணப்படுவதால் அந்தப் பகுதியில் விஷஜந்துகள் அதிக அளவில் உள்ளதாகவும், எனவே பிடிக்கப்பட்டுள்ள கிரானைட் லாரிகளையும், கற்களையும் அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பர்கூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.