பெங்களூரு: சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது நீர்யானை தாக்கி 27 வயதுப் பெண் கால்நடை மருத்துவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்தது.
ஷிவமோகாவில் உள்ள விலங்கியல் தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 19) இந்தத் துயரம் நேர்ந்தது.
மாண்டவர் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் சமீக்ஷா ரெட்டி என அடையாளம் காணப்பட்டது. அண்மையில் கால்நடை அலுவலராக நியமிக்கப்பட்ட அவர், அந்த விலங்கியல் தோட்டத்தில் பயிற்சி பெற்றுவந்தார்.
இந்நிலையில், பறவை ஒன்றுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மருத்துவர் சமீக்ஷா அந்த விலங்கியல் தோட்டத்திற்குச் சென்றார். பின்னர் 11.45 மணியளவில், கர்ப்பமாகவுள்ள அந்த நீர்யானை இருந்த கூண்டிற்குள் அவர் சென்றார்.
புகைப்படக் கருவியுடன் கூடிய வெப்பமானியைக் கொண்டு நீர்யானையின் உடல்வெப்பநிலையை மருத்துவர் சமீக்ஷா அறிய முயன்றபோது, அது அவரைத் திடீரெனத் தாக்கியது. இதனால், அவர் கடுமையாகக் காயமடைந்தார்.
உடனடியாக ஷிவமோகாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என மாநில வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே குறிப்பிட்டார். மேலும், சம்பவம் தொடர்பில் உயர்நிலை விசாரணைக்கும் உத்தரவிட்ட அவர், ஏழு நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், உயிரிழந்த மருத்துவர் சமீக்ஷாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

