திருவனந்தபுரம்: துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், நீதிபதிகளே தலையிட்டு துணைவேந்தரை நியமிக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அங்குள்ள ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பர்திவாலா, நீதிபதி விசுவநாதன் ஆகிய இருவரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள ஆளுநர் தரப்பில் முன்னிலையான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி துணைவேந்தர் தேர்வுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட இரண்டு பெயர்களை ஆளுநர் ஏற்றுக்கொண்ட நிலையில், மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும் என இரு நீதிபதிகளும் வலியுறுத்தினர்.
அவ்வாறு கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை எனில் உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு, சட்டப்படி துணைவேந்தரை நியமிக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.
நீதிபதிகளின் இந்த அதிரடி அணுகுமுறை மனுதாரர், எதிர் மனுதாரர் ஆகிய இருதரப்புகளையும் அதிர வைத்தது.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஆளுநர், அரசுத் தரப்புக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கேரள ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


