துணை அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன் முதன்முறையாக இலங்கை பயணம்

துணை அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன் முதன்முறையாக இலங்கை பயணம்

2 mins read
450a9dd8-8dcf-4384-aa91-6310bdf9f632
துணை அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது பயணத்தின்போது, இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ்ச் சமூகத்தின் முக்கிய தலைவர்களுடன் தமிழர்களின் உரிமைகள், வாழ்வாதார மேம்பாடு, இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: எக்ஸ் தளம்/இந்திய வெளியுறவு அமைச்சு
Google News Preferred Icon

கொழும்பு: இந்தியத் துணை அதிபர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) காலை இலங்கை சென்றடைந்தார். துணை அதிபர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது.

இலங்கை சென்றடைந்த அவர், அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார்.

இந்தச் சந்திப்புகளின்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.

இப்பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் தலைவர்களையும், இந்திய வம்சாவளி தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசுவார்.

தனது இருநாள் பயணத்தின்போது எரிசக்தி, சமுதாய மேம்பாடு, வட்டாரங்களின் வளர்ச்சி, மீனவர் நலன் உட்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையேயும் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

50,000 வீடுகள் ஒப்படைப்பு

துணை அதிபர் தனது பயணத்தின் போது நுவரெலியா பகுதிக்குச் சென்று, இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்டு வரும் வீட்டுத் திட்டங்களையும் நேரில் பார்வையிடுவார்.

கொழும்பில் ஞாயிறு மாலை நடைபெறும் இந்திய வம்சாவளியினருக்கான சிறப்பு நிகழ்ச்சியில் துணை அதிபர் உரையாற்றுவார்.

அப்போது, இந்திய அரசின் நிதியுதவியுடன் ‘இந்திய வீட்டுத் திட்டத்தின்’ மூன்றாம் கட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை, தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளிடம் அவர் காணொளி வாயிலாக ஒப்படைக்கிறார்.

இதனுடன், இலங்கைத் தமிழ் மக்களுக்காக இந்திய அரசு கட்டித் தந்த மொத்த வீடுகளின் எண்ணிக்கை 50,000ஐ எட்டுகிறது.

இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகள் கட்டும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அதிகாரபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த வீட்டு வசதித் திட்டம், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்