புதுடெல்லி: இந்தியாவில் துணை அதிபருக்கான தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தேசிய கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு இரவு விருந்து அளிக்கவுள்ளார்.
இந்தியத் துணை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
நாட்டின் 14வது துணை அதிபராக இருந்து ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி பதவி விலகினார்.
இதையடுத்து புதிதாக துணை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மராட்டிய மாநில ஆளுநரும் தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் வேட்பாளராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் நாளான செப்டம்பர் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 6 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு, இரவு 7.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில் வேட்பாளர் 50 விழுக்காட்டிற்கும் கூடுதலான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால், இந்தியாவின் 15வது துணை அதிபராக பொறுப்பு ஏற்பார்.
இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தின நாளான செப்டம்பர் 8ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்க இருக்கிறார்.
அப்போது, அவர்களுடன் பேசவும் இருக்கிறார்.
இதுபற்றி தெரிவித்த கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமையை வலுப்படுத்தவும் மற்றும் பிணைப்புகளை வளர்க்கவும் இதுபோன்ற உரையாடல்கள் எப்போதும் பலனளிக்கும் என கடந்த கால நிகழ்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன,” என்று குறிப்பிட்டுள்ளார்.