புதுடெல்லி: இந்திய துணை அதிபர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளது பாஜக.
68 வயதான சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் உள்ளார். தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராகப் பொறுப்பில் உள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கடந்த 1974ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக இருந்த அவர், கடந்த 1996ஆம் ஆண்டு தமிழக பாஜக செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.
அதையடுத்து, 1998, 1999 மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், 2004-2007ஆம் ஆண்டு வரை தமிழக பாஜக மாநிலத் தலைவராகப் பதவி வகித்தவர்.
அச்சமயம் குமரி முதல் சென்னை வரை அவர் மேற்கொண்ட பாத யாத்திரை, தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு கைகொடுத்தது.
கடந்த 2004ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சபையில் உரையாற்றி உள்ளார். 2020-2022ஆம் ஆண்டு வரை பாஜகவின் கேரள மாநிலப் பொறுப்பாளராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த 2023 பிப்ரவரி மாதம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2024ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், தற்போது துணை அதிபர் வேட்பாளராகவும் பாஜகவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தலைமையின் இந்த அறிவிப்பு அக்கட்சியின் தமிழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயார் ஜானகி அம்மாள், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“தேர்தலில் வெற்றிபெற இறைவன் அருள்புரிய வேண்டும். முன்னாள் இந்திய அதிபர் ராதாகிருஷ்ணன் பெயரை நினைத்தே, என் மகனுக்கு அவரது பெயரை வைத்தோம். ஆனால், என் மகனும் துணை அதிபர் பதவிக்கு வருவார் என நினைத்துப் பார்க்கவில்லை,” என்றார்.
இதற்கிடையே, சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுத்திறனால் பொது வாழ்வில் தன்னை வேறுபடுத்திக் காட்டியவர் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தாம் வகித்த பல்வேறு பதவிகளின்போது, சமூக சேவை, விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார்,” என்று மோடி கூறியுள்ளார்.