புதுடெல்லி: இந்தியத் துணை அதிபர் தேர்தலில், இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இத்தகவலைத் தெரிவித்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் சி.பி.ராதாகிருஷ்ணன். புதன்கிழமை (ஆகஸ்ட் 20) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று இண்டியா கூட்டணி வேட்பாளரை ஒருமனதாகத் தேர்வு செய்ய அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் திரு கார்கே ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில், துணை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்யும் அதிகாரம் கார்கேவுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் ஆலோசனை நடத்திய திரு கார்கே, அதன் முடிவில் சுதர்சன் ரெட்டி பெயரை வேட்பாளராக அறிவித்தார்.
முன்னதாக, இண்டியா கூட்டணி சார்பில் திமுக மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா போட்டியிட இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பெயர் பரிசீலிக்கப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியானது.
ஆனால், இரு கூட்டணிகளின் சார்பாகவும் தமிழர்கள் மட்டுமே வேட்பாளராக அறிவிக்கப்படுவதை ஏற்க இயலாது என திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைமை கூறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எனினும், இத்தகைய ஆரூடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியின் பெயர் அறிவிக்கப்பட்டதுடன், இண்டியா கூட்டணித் தலைவர்கள் அனைவரும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக திரு கார்கே தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் பிறந்த திரு சுதர்சன் ரெட்டி, கோவா மாநிலத்தின் முதல் மக்கள் நீதிமன்றத் (லோக் ஆயுக்தா) தலைவராகவும் கௌகாத்தி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, அனைத்துக் கட்சிகளும் தம்மை ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.