புதுடெல்லி: இந்திய துணை அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது. உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தியாவின் 14வது துணை அதிபராகப் பதவி வகித்த ஜக்தீப் தன்கர் அண்மையில் பதவி விலகினார். இதையடுத்து, புதிய துணை அதிபர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
உடல்நலம் காரணமாக அவர் பதவி விலகியதாகக் கூறப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் இதை ஏற்கவில்லை. அவரது பதவி விலகல் முடிவில் ஏதோ மர்மம் உள்ளதாகவும் பாஜக அவரை அவமதித்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதி புதிய துணை அதிபரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. உடனுக்குடன் ஆளும் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ளார்.
எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி சார்பாக தெலுங்கானாவைச் சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி களமிறக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) காலை நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குகள் பதிவு செய்யப்படும்.
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். மாநிலங்களவையின் நியமன எம்பிக்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இரு கூட்டணிகளைச் சேர்ந்த எம்பிக்களுக்கும் வாக்களிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
துணை அதிபர் தேர்தலில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த மொத்தம் 788 உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும். இதில் ஏழு இடங்கள் காலியாக உள்ளன.
எனவே, இம்முறை 781 எம்பிக்கள் வாக்களிப்பர். 391 எம்பிக்களின் ஆதரவைப் பெறுபவர் வெற்றி பெறுவார்.
பாஜக கூட்டணிக்கு இரு அவைகளிலும் 422 பேரின் ஆதரவும் இண்டியா கூட்டணிக்கு 313 எம்பிக்களின் ஆதரவும் உள்ளது.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த சில எம்பிக்கள், அணி மாறி தங்களுடைய வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளதாக இண்டியா கூட்டணித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

