புதுடெல்லி: சமூக ஊடகங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த சிறுமி மீது வழக்குப் பதிவு செய்யப்போவதில்லை என டெல்லி காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, 15 வயதான அந்தச் சிறுமி மன்னிப்புக் கோரி மற்றொரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் நீட் வினாத்தாள் கசிவுக்குக் கண்டனம் தெரிவித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சிக்கும் காணொளி ஒன்றை அச்சிறுமி வெளியிட்டதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில், பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
அதையடுத்து, சிறுமியைக் கைது செய்யக்கோரி சில தரப்பினர் வலியுறுத்தினர். எனினும், டெல்லி காவல்துறை இதுதொடர்பாக மௌனம் காத்து வந்தது.
பிரதமர் குறித்து விமர்சித்தது 15 வயது சிறுமி அல்ல என்றும் அவர் ஓர் இளம் பெண் என்றும் சமூக ஊடகங்களில் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தனது ‘முதலும் கடைசியுமான தவறு’ எனக் குறிப்பிட்டு, அந்தச் சிறுமி வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது தனது நண்பர்களுடன் தானும் களத்துக்குச்சென்று இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அங்கு பிரதமர் மோடிக்கு எதிராக சில தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதை நேரில் கண்டதாகத் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் சிலரது தூண்டுதலின்பேரில் தாம் அந்த வார்த்தைகளைத் திருப்பிக் கூறியதாகவும் அதில் தமக்கு எந்தவித உள்நோக்கமும் இருக்கவில்லை என்றும் அந்தச் சிறுமி தெரிவித்தார்.
நடந்த சம்பவத்துக்காகத் தாம் வெட்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள சிறுமி, ஒட்டுமொத்த இந்திய குடிமக்களிடம் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
சிறுமி பகிரங்க மன்னிப்புக் கோரியதாலும் அவரது வயதை மனத்தில் கொண்டும் அவர் மீது எவ்வித மேல்நடவடிக்கையோ அல்லது முறையான முதல் தகவல் அறிக்கையோ பதிவு செய்யப்பட மாட்டாது என டெல்லி காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

