புதுச்சேரி: உப்பளம் துறைமுகத் திடலில் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) காலை நடைபெற்றது.
கரூர்த் துயரச் சம்பவத்திற்கு பிறகு நடக்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் மக்களிடையேயும் அரசியல் கட்சிகள் இடையேயும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க 5,000 தொண்டர்களுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.
சென்னையிலிருந்து கார் மூலம் புதுச்சேரிக்குச் சென்ற விஜய், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே நிகழ்ச்சி நடந்த இடத்தை அடைந்தார்.
இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரசாரப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் முதலில் உரையாற்றினர்
அவர்களைத் தொடர்ந்து பிரசார வாகனத்தில் ஏறிய விஜய், மக்கள் சந்திப்புக்கு அனுமதி வழங்கிய புதுச்சேரி அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தமது உரையைத் தொடங்கினார்.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளம் ஆகியவை தென்னிந்தியாவின் வேறு பகுதிகளாக இருந்தாலும் அவை அனைத்தும் தமது உறவுதான் எனக் கூறிய அவர், மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில நிலை வழங்காததைச் சாடினார்.
“புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி இருந்தாலும் மத்திய அரசு புதுச்சேரியைக் கண்டுகொள்ளவில்லை. புதுச்சேரி, காரைக்காலில் ஐந்து ஆலைகள், பல தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பல்லாயிரக்கணக்கான இளையர்கள் வேலைத் தேடி வேறு மாநிலம் செல்லும் சூழல் உருவாகியுள்ளது,” என விஜய் தமது உரையில் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், கடலோரமான ரயில் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்திய நிதிக் குழுவில் மத்திய அரசு சேர்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட, 11 நிமிடங்கள் விஜய் பேசினார். தொண்டர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படாததால் அவர்களும் நின்றபடியே சந்திப்பில் கலந்துகொண்டனர்.
துப்பாக்கியுடன் வந்த நபர்
தவெகவின் சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலர் டாக்டர் பிரபுவுக்கு அரசு அனுமதியுடன் இருவர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில் டேவிட் எனும் பாதுகாவலர் தொண்டர்கள் வரும் வழியில் இடுப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அவரைப் புதுச்சேரி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், அங்குச் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
விதிமுறையை மீறிய ஆனந்த்; எச்சரித்த பெண் அதிகாரி
கியூஆர் குறியீடு சரிபார்க்கப்பட்டப் பிறகே தொண்டர்கள் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், விஜய் பேச ஐந்து நிமிடங்களுக்கு முன்பு எந்தவொரு சோதனையும் இல்லாமல் தொண்டர்களைக் கூட்டத்துக்குள் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அனுப்ப முயன்றதாகக் கூறப்பட்டது.
இதனால், அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த உயரதிகாரி இஷா சிங், “நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் சொல்லாதீர். உங்களின் கவனமின்மையால் கரூரில் பலர் உயிரிழந்தனர்,” எனக் கடுமையாக ஆனந்தைச் சாடினார்.
மேலும், ஆனந்த் உள்ளே அழைத்த தொண்டர்களை, கூட்டத்திற்குள் நுழைய விடாமல் அவர் தடுத்தார்.
கட்சி நிர்வாகி என்றும் பாராமல், பெண் அதிகாரி ஒருவர் அவரைக் கடுமையாகப் பேசிய காணொளி இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

