இந்தியக் கிராமத்தில் ஜிம்மி கார்ட்டருக்கு அஞ்சலி

2 mins read
d4951663-8a0e-42d5-8cb3-6c3ef6220a51
1978ல் இந்தியாவில் கிராம மக்கள் சூழ பாரம்பரிய உடையில் மனைவி ரோசலினுடன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர். - கோப்புப் படம்: எரிக் கார்செட்டி ‘எக்ஸ்’

புதுடெல்லி: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் சூட்டப்பட்ட இந்தியக் கிராமத்தில் மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1977ஆம் ஆண்டிலிருந்து ஒரு தவணைக் காலத்திற்கு அதிபராக இருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை தமது 100வது வயதில் காலமானார்.

அடுத்த வாரம் வாஷிங்டனில் அவருக்கு முழு அரசாங்க மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வந்து சென்ற இந்தியக் கிராமத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. கார்ட்டர்பூரி அல்லது கார்ட்டரின் கிராமம் என்ற அந்த இடம் டெல்லிக்கு வெளிப்புறத்தில் 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தாலத்பூர் நசிராபாத் என்று முன்பு அழைக்கப்பட்ட அந்தக் கிராமத்தில் 1960களில் கார்ட்டரின் தாயார் லிலியன் அங்கு தங்கியிருந்து தாதியாகவும் தொண்டூழியராகவும் பணியாற்றினார்.

1978 ஜனவரி 3ஆம் தேதி கார்ட்டரை வரவேற்பதற்காக பல மாதங்களுக்கு முன்பே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதாக அந்தக் கிராமத்தின் மக்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

முக்கிய சதுக்கத்தில் அவரை வரவேற்கும்விதமாக பல நிகழ்வுகள் நடைபெற்றன.

இவ்வாரம் அவரது மறைவுச் செய்தியைக் கேட்ட மக்கள் அவரது படத்திற்கு மலர் வளையங்களையும் பூங்கொத்துகளையும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரான எரிக் கார்செட்டி, இந்தியாவில் ஜிம்மி கார்ட்டருக்கு அளிக்கப்பட்ட உயர் மரியாதைக்கான சிறந்த சான்று இந்தக் கிராமம் என்று ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் கிராம மக்கள் சூழ பாரம்பரிய உடையில் மனைவி ரோசலினுடன் ஜிம்மி கார்ட்டர் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருக்கும் படத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்