புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவும் வீராங்கனை வினேஷ் போகத்தும் சில நாள்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் முறைப்படி தங்களை இணைத்துக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் ரயில்வே துறையில் பணியாற்றி வந்த தங்களது பதவிகளில் இருந்து விலகினர்.
விளையாட்டு ஒதுக்கீட்டில் சிறப்புப் பணி அதிகாரிகளாக பணியாற்றி வந்த இருவரின் பதவி விலகலை உடனடியாக ஏற்பதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹரியானா சட்டசபை தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட வினேஷ் போகத்துக்கு காங்கிரஸ் கட்சி இடம் வழங்கி உள்ளது.
அதனால் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஹரியானா சட்டசபை தேர்தலில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் இவர்கள் இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும், ஆளும் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்றி, காங்கிரசை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே வெளியான கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு எதிராக உள்ளன. அதனால் ஹரியானா சட்டசபை தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

