புதுடெல்லி: பிரபல மல்யுத்த வீராங்கனை ரயில்வே பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது மல்லிகார்ஜுனா கார்கேவைச் சந்தித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை புதன்கிழமை சந்தித்தனர்.
ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில், “ரயில்வேயில் பணியாற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத பெருமையான ஒன்று. தற்போது, இந்தியன் ரயில்வேயிலிருந்து விலகுகிறேன். அதற்கான எனது பதவி விலகல் கடிதத்தை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டேன். இந்த நாட்டுக்காக ரயில்வே பணியில் சேவையாற்ற வாய்ப்பளித்த இந்தியன் ரயில்வே துறைக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்,” எனக் கூறியுள்ளார்.
வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் செப்டம்பர் 6ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு காங்கிரசில் இணைய உள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி, ஒலிம்பிக் அமைப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இருப்பினும், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.