முதியோர் பராமரிப்பு மையத்தில் வினோத் காம்ப்ளி

முதியோர் பராமரிப்பு மையத்தில் வினோத் காம்ப்ளி

படம்: தினத் தந்தி

27 Sep 2026 - 5:24 pm

2 mins read

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரரான வினோத் காம்ப்ளி தானேவில் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்தில் தங்கியுள்ளார். அங்கு அவர் தங்கியிருப்பது தொடர்பிலான புதிய தகவல்களும் காணொளியும் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பராமரிப்பு மையத்திலிருந்து வெளியாகியுள்ள புதிய காணொளியில் காம்ப்ளி பேசுவதற்குச் சிரமப்படுவது போல் காட்சிகளில் தெரிகிறது. அதில் பேசியுள்ள அவர், தற்போது தாம் அங்குச் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள வசதிகள் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் தமக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், வினோத் காம்ப்ளி நிரந்தரமாக அந்த முதியோர் பராமரிப்பு மையத்தில் தங்கியிருக்கிறாரா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் ஆட்டக்காரரான காம்ப்ளிக்குத் தொடர்ச்சியாகப் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்து வருகின்றன.

கடந்த 2024ல் சிறுநீரகப் பாதை தொற்று உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை தொடர்பாக அவரது நண்பரும் முன்னாள் முதல்தர நடுவருமான மார்கஸ் கவுட்டோ சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

காம்ப்ளியின் மூளையில் ரத்தக்கட்டி இருப்பதாகவும் அதன் காரணமாக நினைவாற்றல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் மார்கஸ் கவுட்டோ கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய காணொளியால் அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

இந்திய தேசிய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வினோத் காம்ப்ளி 1,084 ரன்களை எடுத்துள்ளார். அத்துடன், அவர் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 2,477 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்