பீகார், நேப்பாள மக்களுக்கு எதிராக வெடித்த வன்முறை: அசாமில் பதற்றம்

1 mins read
67eea4d8-4d36-4563-85b6-37fcfe675ba6
அசாம் மாநிலத்தின் கார்பி ஆங்லாங், மேற்கு கார்பி ஆங்லாங் ஆகிய மாவட்டங்களில்தான் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருகின்றன. - படம்: தினகரன்

கௌஹாத்தி: நேப்பாளம், பீகார் மாநில மக்களுக்கு எதிராக அசாம் மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின்போது காவல்துறை உயர் அதிகாரிகள் காயம் அடைந்ததாகவும் கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அங்கு இணையத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் கார்பி ஆங்லாங், மேற்கு கார்பி ஆங்லாங் ஆகிய மாவட்டங்களில்தான் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருகின்றன.

பீகார் மாநில மக்களும் நேப்பாளக் குடிமக்களும் தங்கள் மாநிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக அசாம் மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

எனவே, ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும் எனக் கூறி அங்கு போராட்டம் வெடித்துள்ளது. கடந்த மூன்று நாள்களாக நீடித்து வரும் போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற ஐபிஎஸ் காவல் அதிகாரிகள் படுகாயம் அடைந்ததாகத் தெரிகிறது.

கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 22) மாலை சந்தைப் பகுதியில் உள்ள கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

போராட்டம் தீவிரமடைந்ததால் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இருதரப்புக்கும் இடையே மோதல் வலுத்தது. இதில் 38 காவலர்கள் காயமடைந்ததாக அசாம் காவல்துறைத் தலைவர் டிஜிபி ஹர்மீத் சிங் தெரிவித்தார்.

வன்முறை பாதித்த பகுதிகளை மாநில அமைச்சர் ரனோஜ் பெகு செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். எனினும், அவர் வந்து சென்ற பிறகு மீண்டும் வன்முறை வெடித்ததால் பதற்றம் நீடிப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்