மணிப்பூரில் மீண்டும் வன்முறை:10,000 வீரர்களை அனுப்புகிறது மத்திய அரசு

1 mins read
fe40e0f5-dbef-4d50-b031-1e8e0dbcd7d6
மணிப்பூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் கூடுதலாக 10,000 வீரர்களை மத்திய அரசு அனுப்புகிறது.

மணிப்பூரில் மைதேயி, குக்கி இனத்தவரிடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

மோதல் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் அங்கு இன்னும் வன்முறை விட்டுவிட்டுத் தொடர்கிறது.

குக்கி, மைதேயி இனத்தைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக கடந்த 11ஆம் தேதி இரண்டு ஆண்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும், மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகளைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இதனால், மணிப்பூரின் ஜிரிபாம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மணிப்பூர் மாநிலப் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங், துணை ராணுவத்தைச் சேர்ந்த 90 கம்பெனி வீரர்கள் (10,800 பேர்) கூடுதல் பாதுகாப்புக்காக இங்கு வரவிருக்கின்றனர் என்றார்.

“பல்வேறு பகுதிகளின் பாதுகாப்புப் பணிக்காகவும் சுற்றுக்காவல் பணிக்காகவும் வீரர்கள் அனுப்பப்படுவார்கள்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்