ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆட்சியின் கீழுள்ள காஷ்மீர் பகுதியில் வெடித்த வன்முறையின்போது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குத் தடை செய்யப்பட்ட போராட்டக் குழுவின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மோதல் ஏற்பட்டது.
பாகிஸ்தானில் வட்டாரத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளதாக சில தரப்பினர் புகார் எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து. தேர்தல் ஏற்பாடுகளுக்கு எதிராக அக்குறிப்பிட்ட போராடடக் குழுவினர் பேரணி நடத்தியுள்ளனர்.
பேரணி நடைபெறும் தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாகவே அது நடத்தப்பட்டது.
பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் ஏராளமான அகதிகளுக்காக சட்டமன்றத்தில் 12 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஏற்பாடு உள்ளூர்ப் பிரதிநிதித்துவத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும் என போராட்டக்குழு தெரிவித்துள்ளது. இதனால் வன்முறையில் ஈடுபட வேண்டியுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறினர்.
காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு வாகன அணிவகுப்பை மறித்து போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தியதாக பூஞ்ச் காவல்துறை ஆணையர் வஹீத் கான் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) நடந்த தாக்குதலின்போது காவல்துறையினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் போராட்டக்காரர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, தரார்கால் பகுதியில் நடந்த மோதலின்போது ஆறு போராட்டக்காரர்களும் காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டனர்.
ராவலகோட் பகுதியில் நடந்த மற்றொரு மோதலில் ஒரு போராட்டக்காரரும் ஒரு பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்தனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின்கீழ் ஜூன் மாதம் தடைசெய்யப்பட்ட கூட்டு நடவடிக்கைப் போராட்டக் குழு, ஜூலை 15 அன்று ராவலகோட்டில் பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தது.
அதற்கு முன்னதாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின்போது ஒன்பது பேர் கொல்லப்பட்டதையடுத்து பாதுகாப்புப் படையினர் தயார்நிலையில் இருப்பதாக ஆணையர் வஹீத் கான் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆட்சிக்குட்பட்ட காஷ்மீரில் பல்லாண்டுகளாக நடந்து வரும் சுரண்டல், அடிப்படை உரிமைகள் மறுப்பு, நிர்வாக ஒடுக்குமுறை ஆகியவற்றின் நேரடி விளைவுதான் இந்தப் போராட்டங்கள் என இந்திய வெளியுறவு அமைச்சு சாடியது.

