புதுடெல்லி: ஈரான் விவகாரம் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உள்ளதாக அங்குள்ள மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய உள்துறை அமைச்சு கடிதம் எழுதியுள்ளது. அதில், வன்முறை நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரமாக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக மத்திய கிழக்கு நாடுகளில் மிகுந்த போர்ப்பதற்றம் நீடிக்கிறது. ஈரான்மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடும் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன. இதனால், ஈரானில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 550ஐக் கடந்துவிட்டது.
ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இயங்கிவரும் அமைப்புகள் சார்பாக ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஈரான் ஆதரவாளர்களின் பேச்சுகளால் வன்முறைகள் நிகழக்கூடும். அத்தகைய பேச்சாளா்களை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் ஈரான் விவகாரத்தை மையமாக வைத்து சட்டம், ஒழுங்கு நிலை பாதிக்காதவாறு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துலக தீவிரவாதக் குழுக்களைச் சோ்ந்தோரின் பதிவுகள், பிரிவினைவாதிகளின் சமூக ஊடகச் செயல்பாடுகள் அனைத்தும் கண்காணிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் ஏற்கெனவே ஈரானுக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேல் தூதரகங்கள்மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, அவற்றின் தூதரகங்கள், அரசுதந்திர அலுவலகங்களுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் ஆளில்லா வானூர்திகள் ஊடுருவல்
இதற்கிடையே, காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் சிறிய வகை ஆளில்லா வானூர்திகளின் (டிரோன்) ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது.
ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் ஏராளமானோர் பங்கேற்றதால் ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதி வழியே ஆளில்லா வானூர்திகள் ஊடுருவ முயற்சி செய்வதாக ராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

