புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன விபாட் ஆளில்லா வானூர்திகள் இந்தியா வந்துள்ளன.
இவற்றால் செங்குத்தாக மேலெழும்பவும், தரையில் இறங்கி தாக்குதல் நடத்தவும் இயலும். இதனால் இவை ‘வி -டால்’ ஆளில்லா வானூர்திகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இனி வரும் காலங்களில் போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஆளில்லா வானூர்திகள்தான் அதிக அளவில் ஈடுபடுத்தப்படும் என்பதால், அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட ‘வி -டால்’, ‘வி-பாட்’ ஆளில்லா வானூர்திகள் இந்தியா வந்துள்ளன.
இவற்றின்மூலம் போர்க்களத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நிறுவனங்களான அண்டுரில், ஷீல்டு ஏஐ போன்ற நிறுவனங்கள் ‘வி-பாட்’, ‘நோவா’ போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளில்லா வானூர்திகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளன.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எம்க்யூ-35 என அழைக்கப்படும் ‘வி-பாட்’ ஆளில்லா வானூர்திகளால் செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கவும் முடியும்.
இந்த ஆளில்லா வானூர்திகள் 500 கி.மீ. தூரம் சென்றும், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் 10 மணி நேரம் பறக்கும் திறன் உடையது. இந்த ஆளில்லா வானூர்திகளில் 11.3 கி.லோ எடையுள்ள வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.
இந்த வி-பாட் ஆளில்லா வானூர்திகள் அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் மைக்கேல் மான்சூரில் பயன்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

