வாஷிங்டன்: அண்மைக்காலமாக அமெரிக்காவில் கல்வி பெற்று வரும் அனைத்துலக மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், இந்நடவடிக்கையால் இந்திய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
இவ்வாறு விசா ரத்து செய்யப்பட்ட மாணவர்களில் 50 விழுக்காட்டினர் இந்திய மாணவர்கள் எனக் கூறப்படுகிறது.
இதுவரை 327 வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் இவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர்கள் என்றும் அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
விசா ரத்து நடவடிக்கையில் தெளிவில்லை என்றும் ஏற்க முடியாத சரியில்லாத காரணங்கள் குறிப்பிடப்படுவதாகவும் இச்சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.
இது மாணவர்களின் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக இந்தியா டுடே ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
விசா ரத்து நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களில் 14% பேர் சீன மாணவர்களாவர். மேலும், தென் கொரியா, நேப்பாளம், பங்ளாதேஷ் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சு, சுங்கம் - குடியேற்றத்துறை, வெளிநாட்டு மாணவர்கள் குறித்து ஆய்வு செய்தது. அதற்காக அவர்களின் கடந்த நான்கு மாத கால செயல்பாடுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக வழக்கறிஞர்கள் சங்கம் கூறுகிறது.
மேலும், இந்த ஆய்வுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது என்றும் இதனால் பல குளறுபடிகள் ஏற்பட்டன என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எந்தவிதமான போராட்டங்களிலும் பங்கேற்காத, குற்றச்சாட்டுக்குள்ளாகாத மாணவர்களும் பாதிக்கப்பட்டதாக சிலர் குற்றஞ்சாட்டி உள்ளனர் என்றும் அச்சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில் மட்டும் அமெரிக்காவில் விருப்ப நடைமுறை பயிற்சி (OPT) திட்டத்தின்கீழ் சுமார் 3.32 லட்சம் மாணவர்கள் உள்ளனர். இவர்களில் ஏறக்குறைய 97,000 மாணவர்கள் (29%) இந்திய மாணவர்கள்.
இது வெளிநாட்டு பட்டதாரிகள் அமெரிக்காவில் தற்காலிக அடிப்படையில் தங்கி பணிபுரிய உதவுகிறது.
ஆனால், அமெரிக்க அரசின் அண்மைய சில நடைமுறைகள் காரணமாக சில மாணவர்களால் தங்கள் பணியில் நீடிக்க இயலாது.
“பாதிக்கப்பட்ட பெரும்பாலான மாணவர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்படவில்லை அல்லது அவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்பட்டன. இதுவரை மாணவர்கள் பதிவான வழக்குகளில் இரண்டு மட்டுமே அரசியல் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை.