புதுடெல்லி: இந்தியாவின் டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனமான விஸ்தாரா விமான நிறுவனம், தன்னுடைய அனைத்துலக விமானங்களில் 20 நிமிடங்களுக்கு இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என சனிக்கிழமை (ஜூலை 27) அறிவித்துள்ளது.
இத்தகைய சேவை வழங்கும் முதல் இந்திய விமான நிறுவனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
விருப்பமுள்ள பயணிகள் இந்தியக் கடனட்டை அல்லது பற்றட்டைகளைக் கொண்டு நீடித்த வைஃபை இணைப்புத் திட்டங்களையும் பெற முடியும்.
‘பிஸ்னஸ் வகுப்பு’ மற்றும் ‘பிளாட்டினம் கிளப் விஸ்தாரா’ உறுப்பினர்களுக்குக் கூடுதலாக 50 MB இலவச வைஃபை சேவையும் வழங்கப்படும்.
போயிங் 787-9 டிரீம்லைனர், ஏ321நியோ விமானங்களில் இச்சேவை வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வழியாக ஒருமுறை பயன்படுத்தும் மறைச்சொல் அனுப்பப்படும் என்று விஸ்தாரா தெரிவித்துள்ளது.
இப்போது, உறுப்பினர் அல்லாதோர் வரம்பின்றி வாட்ஸ்அப் போன்ற குறுஞ்செய்திச் செயலிகளைப் பயன்படுத்த ரூ.372.74 (ஜிஎஸ்டி தவிர்த்து) வசூலிக்கப்படுவதாக அவ்விமான நிறுவனம் கூறியது.
அவ்விமானங்களில் பயணம் செய்யும்போது இணையச் சேவையைப் பயன்படுத்த ரூ.1,577.74 (ஜிஎஸ்டி தவிர்த்து) வசூலிக்கப்படுகிறது.