புதுடெல்லி: விவசாயிகளின் பேரணி எதிரொலியாக டெல்லி முழுவதும் திங்கட்கிழமை முதல் மார்ச் 12ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக வருவதை தடுப்பதற்காக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மார்ச் 12ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் நுழையும் விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக திங்கட்கிழமை அன்று காவலர்கள் முக்கிய சாலைகளை மூடினர்.
உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 200 சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று விவசாயிகள் செவ்வாய்க் கிழமை தலைநகருக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து விவசாயிகள் நுழைய முடியாத அளவுக்கு ஹரியானா மாநில எல்லையில் உள்ள சாலைகளில் இரும்பு ஆணிகள், கான்கீரிட் பாளங்களைக் கொண்டு பிரம்மாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
2021ஆம் ஆண்டில் தலைநகரை நோக்கிச் செல்லும் சாலைகளை முற்றுகையிட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
அப்போது விளைபொருள்களுக்கு நல்ல விலை நிர்ணயம், விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கினர்.
“நாங்கள் அமைதியாக நடந்து செல்வோம். எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு,” என்று பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் மன்றத்தின் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பந்தர் ஏஎன்ஐயிடம் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்களில் சிலர் விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாக திங்கட்கிழமை வெளியான தகவல் தெரிவித்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல், நித்தியானந்த் ராய் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 3வது தவணைக் காலத்திற்கும் வெற்றி பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.